பசுபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்றழைக்கப்படும் TPP ஒப்பந்தத் திட்டத்தில் இருந்து அமெரிக்கா தன்னை விலக்கிக் கொள்ளும் ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டு, தனது தேர்தல் பிரச்சார உறுதி மொழியொன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிறைவேற்றியுள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமாவின் ஆசிய கொள்கையின் அச்சாணியாக இந்த 12 நாடுகள் அடங்கிய வர்த்தக ஒப்பந்தம் விளங்கியது.
இந்த ஒப்பந்தத்தைத் தனது நிறைவேற்று அதிகாரத்தை உபயோகித்து ஒரு கையெழுத்தின் மூலம் முறித்துக் கொண்ட டொனால்ட் டிரம்ப், இது குறித்து கூறுகையில், “அமெரிக்க தொழிலாளர்களுக்கு ஒரு மிகப் பெரிய நன்மையை நாங்கள் தற்போது செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
பசுபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிளவுபட்ட அமெரிக்க பாராளுமன்றம் இதற்கான இசைவை அளிக்காததால், TPP தொடர்பான நிர்வாகஆணையில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டது ஒரு வெறும் குறியீட்டளவிலான நடவடிக்கை என்றே கருதப்படுகிறது.