நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக அரசாங்கத்துக்கு 1.8 பில்லியன் ரூபாய்கள் நட்டமேற்பட்டதாக கூறும் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று கணக்காய்வாளர் நாயகம், நாடாளுமன்றத்தில் கோப் குழுவின் முன் தமது சாட்சியத்தை வழங்கவுள்ளார்.
கணக்காய்வாளர் நாயகம், காமினி விஜேசிங்க இன்று கோப் குழுவினால் அழைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜெயமஹா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை மின்சாரசபை, நிலக்கரி விநியோக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் தமது சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளனர்.
நிலக்கரி மெற்றிக்தொன் ஒன்று 51 டொலர்களுக்கு கேள்விப்பத்திர அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டபோதும் கணக்காய்வாளர் நாயகம் 58 டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் அடிப்படையிலேயே அரசாங்கத்துக்கு 1.8 பில்லியன் ரூபாய் நட்டமேற்பட்டுள்ளதாக அவர் கூறுவதாகவும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.