நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றப் பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தினத்தை தீர்மானித்துள்ளது.
இதன்படி, இந்த குற்றப் பத்திரிகை ஜூலை 18, 19 மற்றும் 20ம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதற்கமைய அப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இதன்படி, சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பத்திரிகை இன்று(12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதேவேளை, இன்று ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. மாறாக பிரதிவாதி சார்பில் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.
மேலும், ஞானசார தேரரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு இன்று அரச தரப்பு சட்டத்தரணியால் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.