ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மர்மமான முறையில் கீழே விழுந்து காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவிக்கையில்;
தான் கடந்த 7ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் இந்த அமானுஷ்ய சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே நளின் பண்டார இந்த அமானுஷ்ய சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
“கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் நான் தங்கியிருந்த அறையின் குளியல் அறைக்கு சென்றேன். அந்த இடத்தில் திடீரென யாரோ பின்னால் இருந்து என்னை தள்ளி விட்டார்கள். நான் கீழே விழுந்து விட்டேன்.
எனது முகத்தில் காயம் ஏற்பட்டது. எனது அறை மூடியிருந்தமையினால் யாருக்கும் உள்ளே வரமுடியவில்லை. அந்த சம்பவத்தின் பின்னர் நான் எல்லா இடத்திலும் தேடினேன் யாரையும் காணமுடியவில்லை.
இது நினைத்து பார்க்க முடியாத ஒரு அமானுஷ்ய சம்பவம். இது மவுன்ட் பெடன் என்ற சாமி ஒருவர் வசித்த இல்லம். 1905 ஆம் ஆண்டில் இந்த இல்லம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறை விடுதியாக 1980ம் ஆண்டுகளில் மாற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னர் நான் மேற்கொண்ட தேடுதலில், இதே போன்ற மர்ம சம்பவங்களுக்கு மேலும் பலர் முகம் கொடுத்துள்ளதாக தெரிந்து கொண்டேன்.
பல காலங்களுக்கு முன்னர் குறித்த இல்லத்தில் வெள்ளைகார பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அல்லது கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சில வரலாறுகள் உள்ளதாக தகவல் கிடைத்தன.
ஏதோ ஒரு பேய் தான் என்னை தள்ளிவிட்டுள்ளதென்பது எனக்கு 100 வீதம் நம்பிக்கை. மிகவும் பொறுப்புடன் தான் நான் இதனை கூறுகின்றேன். நானும் பேய்களை நம்புவதில்லை. எனினும் நான் முகம் கொடுத்த அமானுஷ்ய சம்பவத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.