நேபாளத்துக்கு உலக வங்கியிடமிருந்து ரூ.3 000 கோடி உதவி

நிலநடுக்கத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நேபாளத்துக்கு 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 3,000 கோடி) உதவித் தொகை அளிப்பதாக உலக வங்கி தெரிவித்தது.

இது தொடர்பாக உலக வங்கித் தலைவர் ஜிம்யோங் கிம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;

நேபாளத்தின் ஊரகப் பகுதிகளின் புனர் நிர்மாணத்துக்கு ரூ. 1,200 கோடி, பெரும் பாதிப்புக்குள்ளான பொருளாதாரத்தை சீரமைக்கும் விதமாக, அந்நாட்டு வங்கித் துறையில் செலுத்த ரூ. 600 கோடி ஒதுக்கப்படும்.

மேலும், பல்வேறு புனரமைப்புத் திட்டங்களுக்கு ரூ. 1,200 கோடி அளிக்கப்படும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் அண்மையில் நிகழ்ந்த நில நடுக்கங்களில் ஏறத்தாழ 9,000 பேர் உயிரிழந்தனர். 5.25 லட்சம் வீடுகள், சுமார் 2,700 அரசுக் கட்டடங்கள் முற்றிலும் அழிந்தன. சுமார் 2.75 லட்சம் வீடுகள், 3,700 அரசுக் கட்டடங்கள் பாதிப்படைந்தமை குறிப்பிடத்தக்கது.