நோர்வூட் தொழிற்சாலையில் மீண்டும் பதற்ற நிலை.. அமானுஷ்யமா? – விசாரணையில் பொலிசார்..

ஹட்டன் – நோர்வூட் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணி புரியும் யுவதிகள் சிலர் நேற்றும்(09) திடீரென நோய்வாய்ப்பட்டு அசாதாரணமாக செயற்பட்டமையால், பிற ஊழியர்களும் அச்சமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தொழிற்சாலையிலுள்ள சுமார் 20 யுவதிகள் ஆவேசமாக நடந்து கொண்டுள்ளதுடன் கத்தி கூச்சலிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கறுப்பு ஆடை அணிந்த ஒருவர் தன் கழுத்தை நெரிப்பதாக பெண் ஒருவர் கத்தியமையை அடுத்தே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தொழிற்சாலையின் நிர்வாகத்தினரால் இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர் டிக்கோயா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் தொழிற்சாலைக்கு சென்று, பாதிக்கப்பட்ட யுவதிகளில் சிலரை பரிசோதித்துள்ளனர்.

எனினும், அவர்களது உடலில் எந்தவொரு நோய் தன்மையும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர்கள், மனநல வைத்தியரிடம் அழைத்துச் செல்லுமாறும் அறிவித்துள்ளனர்.

இது இவ்வாறு இருக்க, சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் சில பூஜைகள் நடத்தப்படாதுள்ளமையே இதற்குக் காரணம் என, ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 4ம் திகதி குறித்த தொழிற்சாலையில் கடமையாற்றிய 240 பெண் ஊழியர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

போதுமான காற்றோட்டம் இல்லாமையே இதற்குக் காரணம் என, ஆய்வுகளில் தெரியவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)