பங்களாதேஷில் பாலியல் அடிமைகளாக சித்திரவதைக்கு உள்ளாகும் ரோஹிஞ்ச சிறுமிகள்…

மியன்மாரில் இருக்கும் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இராணுவத்தினரின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கி போராடி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், உயிரை காக்க லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக வங்கதேசத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.

வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா இன மக்கள் அங்கு அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகாம்களில் உள்ள சிறுமிகள் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து தனியார் செய்தி நிறுவனம் தனது குழுவை வங்காளதேசத்திற்கு அனுப்பி வைத்து விசாரணைகலை நடத்தியுள்ளனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகதிகள் முகாம்களில் இருக்கும் பெரும்பாலான சிறுமிகள் பெற்றோரை இழந்து வாழ்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. இதனை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட பல கடத்தல்காரர்கள் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு உட்படுத்துகின்றனர். மேலும், வேலை வாங்கி தருவதாக கூறி பல நகரங்களுக்கு சிறுமிகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பல முகவர்கள் முகாம்களில் உள்ளதாகவும் அவர்கள் வெளிப்படையாகவே இந்த தொழிலை செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில சிறுமிகள் பாலியல் தொழில் என தெரிந்தும் தனது குடும்பத்திற்காக இதனை செய்கின்றனர். நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக வாழ்வதால் கிடைக்கின்ற வேலையை செய்து வருவதாக சிறுமிகள் கூறியுள்ளனர்.

ரோஹிங்கியோ சிறுமிகளுக்கு நடைபெற்று வரும் மிகப்பெரிய கொடுமை இந்த விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அகதிகளின் நிலைமையை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு பணம் சம்பாதிக்கும் கடத்தல் காரர்கள் மற்றும் முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த தனியார் செய்தி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.