அறக்கட்டளைக்கு முறைகேடாக நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தமை தொடர்பாக கலிதா ஜியா அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டாக்காவில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கலிதா ஜியா சார்பில் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், மறு விசாரணைக்கு உத்தரவிட முகாந்திரம் இல்லை என்று கூறிய மேல் நீதிமன்றம் கலிதா ஜியாவின் மனுவை தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றம் குறித்த தீர்ப்பை உறுதி செய்ததையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஜியா அனாதை இல்ல அறக்கட்டளைக்கு முறைகேடாக 2.5 லட்சம் டாலர்கள் நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று(08) தீர்ப்பு வழங்கப்பட்டது.
கலிதா ஜியா (வயது 72) மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கலிதா ஜியா வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி டாக்காவின் அனைத்து பகுதிகளிலும் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.