பசில் ராஜபக்ஷவின் மல்வானைக் காணியின் ஏல விற்பனை தற்காலிகமாக இடைநிறுத்தம்…

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட மூவருக்குச் சொந்தமானது எனக் கருதப்பட்ட மல்வானைக் காணியின் ஏல விற்பனை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக பூகொடை நீதிவான் செல்வி நிலுபுலி லங்காபுர அறிவித்துள்ளார்.

குறித்த காணியில் தங்களுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என்று பசில் ராஜபக்ஷவும், ஏனைய இருவரும் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து அந்தக் காணியை இம்மாதம் 29ஆம் திகதி பகிரங்க ஏலத்தில் விற்குமாறு பூகொடை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் பிரகாரம் அரச மதிப்பீட்டாளர் இந்தக் காணிக்கும் அதிலிருந்த வீட்டுக்கும் 20கோடியே 80 இலட்ச ரூபாவை மதிப்பீடு செய்திருந்தார்.

இந்நிலையில், பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினர் இந்த ஏல விற்பனையை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யுமாறு விடுத்த கோரிக்கையை நேற்று(22) ஏற்றுக் கொண்ட நீதிவான் இடைநிறுத்த உத்தரவைப் பிறப்பித்ததுடன் வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 23ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

 

(rizmira)