பட்டினியிலிருந்து விடுபடுவதற்காக சிறிய அளவு உணவை திருடுவது ஒரு குற்றமல்ல என இத்தாலிய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரொமான் ஒஸ்ட்ரியாகோவ் என்பவர் சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து சீஸ் மற்றும் சொசேஜ்களை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
இப் பொருட்களின் பெறுமதி 4.07 யூரோ (சுமார் 670 ரூபா) எனத் தெரிவிக்கப்பட்டடிருந்தது. யுக்ரைன் வம்சாவளியைச் சேர்ந்த ஒஸ்ட்ரியாகோவ் இத்தாலியில் வீடற்ற நிலையில் யாசகராக வாழ்ந்து வந்தவர். அவர் 2011 ஆம் ஆண்டு சுப்பர் மார்க்கெட்டில் பாணுக்கு மாத்திரம் பணம் செலுத்திவிட்டு சீஸ், சொசேஜ்களை தனது பொக்கெட்டிற்குள் ஒளித்துவைத்திருப்பது குறித்து மற்றொரு வாடிக்கையாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதன்பின் ஒஸ்ட்ரியாகோவ் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ் வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு ஒஸ்ரியாகோவுக்கு 7 மாத சிறைத்தண்டனையும் 100 யூரோ (சுமார் 17000 ரூபா) அபராதமும் விதித்திருந்தது.
இத் தீர்ப்புக்கு எதிராக இத்தாலிய மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் பட்டினியை போக்குவதற்காக சிறிய அளவு உணவை திருடுவது குற்றமாகாது எனக் கூறிய நீதிபதிகள், ரொமான் ஒஸ்ட்ரியாகோவை விடுதலை செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய உயர் நீதிமன்றமானது சட்ட விடயங்கள் தொடர்பான மனுக்களையே பொதுவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்பதால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு இறுதியானது எனத் தெரிவிக்கப்படுகிறது.