பட அதிபர்கள் வேலை நிறுத்தத்தால் தமிழ் படங்களில் நடித்து கொண்டிருந்த நடிகைகள் தெலுங்கு, மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தமிழ் பட அதிபர்கள் வேலை நிறுத்தத்தால் பட உலகம் ஸ்தம்பித்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன. வெளிநாடுகளிலும் நடந்த படப்பிடிப்புகளையும் நிறுத்தி விட்டார்கள். இதனால் நடிகர்-நடிகைகள் அனைவரும் ஊருக்கு திரும்பி உள்ளனர்.
விஜய் நடித்த படம் உட்பட 4 படங்களுக்கு ஓரிரு நாட்கள் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கி பின்னர் அவற்றின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. கடந்த 21 ஆம் திகதி ஆரபிக்க திட்டமிட்டு இருந்த அஜித்குமாரின் விசுவாசம் படப்பிடிப்பும் நின்று போனது. முன்னணி கதாநாயகர்கள் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள்.
கதாநாயகிகள் பலர் தமிழ் படங்களுக்கு வழங்கிய கால்ஷீட்களை தெலுங்கு, மலையாள படங்களுக்கு ஒதுக்கி அந்த படங்களில் நடித்து வருகிறார்கள். அஜித்குமார் ஜோடியாக நடிக்க விசுவாசம் படத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். அவர் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் ஆகிய படங்களிலும் நடித்து வந்தார்.
வேலை நிறுத்தம் காரணமாக தெலுங்கு படத்தில் நடிக்க சென்று விட்டார் நயன்தாரா. அங்கு சிரஞ்சீவி ஜோடியாக சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சமந்தா தமிழில் இரும்புத்திரை படத்தை முடித்து விட்டு சிவகார்த்திகேயனுடன் சீமத்துரை படத்தில் நடிக்க தயாராகி வந்தார். அவரும் வேலை நிறுத்தம் காரணமாக தெலுங்கு படங்களில் கவனம் செலுத்துகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா ஜோடியாக ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்த ரகுல் பிரீத்சிங்கும் தெலுங்குக்கு போய்விட்டார் எனவும் கூறப்படுகிறது.
காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல கதாநாயகிகள் தெலுங்கில் கவனம் செலுத்துகின்றனர். சில நடிகைகள் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். துணை நடிகர்-நடிகைகளும் வேறுமொழி படங்களுக்கு சென்று விட்டனர்.