பதவி நீக்கப்பட்ட பிரிகேடியர் துவான் சுரேஸ் சாலி மியான்மார் அனுப்பப்படுகிறார்..

இராணுவப் புலனாய்வுப் பிரிவு   பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரிகேடியர் துவான் சுரேஸ் சாலி, மியான்மாருக்கான இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சுரேஸ் சாலி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், நேற்று முன்தினம் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

அவர், இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவு தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ள போதிலும், எந்தப் பதவியும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையிலேயே, மியான்மாரில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு அவரை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிகேடியர் சுரேஸ் சாலி, இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பதவியில் இருந்து திடீரென  நீக்கப்பட்டமை, அரசியல், இராணுவ வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே, அவரை மியான்மாருக்கு அனுப்புவது குறித்து அரசாங்க உயர்மட்டம் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.