பந்துவீச்சு ரகசியம் மலிங்கா கற்றுக் கொடுத்தது தான் – கட்டவிழ்த்த பும்ரா

இலங்கை அணியின் மலிங்க தான் துல்லியமாக யார்க்கர் பந்துவீச தனக்கு கற்றுக் கொடுத்ததாக இந்திய இளம் பந்து வீச்சாளர் ஜாஸ்பிரிட் பும்ரா கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. இதனால் இந்திய அணி ஒருநாள் தொடரில் தொடர் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் 5வது ஒருநாள் போட்டியில் அணித்தலைவர் டோனி 22 வயதேயான பும்ராவை களமிறக்கி சோதனை செய்து பார்த்தார்.

தனக்கு வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட பும்ரா அவுஸ்திரேலியாவை தனது துல்லியமான பந்துவீச்சால் திணறடித்தார்.

இந்நிலையில் தனது பந்துவீச்சு ரகசியம் பற்றி பும்ரா கூறுகையில், “நான் இந்திய ‘ஏ’ அணியில் இருந்த போது கடந்த 2014ம் ஆண்டே அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடினேன்.

அப்போது அந்த அணியின் டெஸ்ட் வீரர்களுக்கு பந்து வீசினேன். இதனால் அங்கு ஆடுகள நிலைமை பற்றி நன்கு அறிந்து கொண்டேன்.

அதேபோல் ஆரம்பத்தில் டென்னிஸ் பந்திலே யார்க்கர் பந்துவீசி பயிற்சி பெற்றேன். மும்பை அணியில் இருக்கும் போது மலிங்க தான் எனக்கு எப்படி யார்க்கர் பந்துவீச வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்.

அவர் எப்போது, எப்படி யார்க்கர் பந்துவீச வேண்டும், எப்படி பந்தின் வேகத்தை கட்டுப்படுத்தி, துடுப்பாட்ட வீரர்களை குழப்ப வேண்டும் என அனைத்தும் கற்றுக் கொடுத்தார்” என்று கூறியுள்ளார்.