சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பின் 100 செய்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளின் பிரபல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் முறைகேடான வழியில் பனாமா நாட்டு வங்கிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் பதுக்கிய சொத்து மற்றும் பணம் பற்றி ரகசியமாக தகவல்களை திரட்டி வந்தனர்.
இந்த தகவல்களை ஆதாரத்துடன் ஜெர்மனி நாளிதழ் ஒன்று ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் வெளியிட்டு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் தகவல்கள் திரட்டப்பட்டு, வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்த பட்டியலில் ரஷிய அதிபர் புதினின் பெயர் நேரடியாக இடம் பெறவில்லை என்றாலும் கூட அவர் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) வங்கிகள் வழியாகவும், நிழல் நிறுவனங்கள் மூலமும் பதுக்கி வைத்திருப்பதாக புலனாய்வு செய்தியாளர்களின் பனாமா ஆவணங்கள் குற்றம் சாட்டி இருக்கிறது.
இந்த பரபரப்பு குற்றச்சாட்டு வெளியானதும் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தும்படி இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில், வெளிநாட்டில் ரஷிய அதிபர் புதின் பணம் பதுக்கி வைத்துள்ள தகவலை அதிபரின் கிரம்ளின் மாளிகை மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்களை வெளியிட்டதாக கூறப்படும் புலனாய்வு செய்தியாளர்கள், செய்தியாளர்களே அல்ல. இவர்கள் அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் அதிகாரிகள். ரஷியாவின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நோக்கத்தில் இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர்.
குறிப்பாக, ரஷியாவில் விரைவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ள வேளையில் நமது நாட்டுக்கும் அதிபர் புதினுக்கும் அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தில் இதுபோன்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது என ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.