முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிக்கும் முடிவில் இருந்து அதிமுக உயர்மட்டத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுகவிற்குள் ஏற்பட்ட பனிப்போர் கடந்த இருவாரமாக உச்சத்தை எட்டியது.
முதலமைச்சராக பதவியேற்ற பன்னீர்செல்வம் தன்னுடைய சுயவிருப்பின் பெயரில் தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.
எனினும் இரண்டு நாட்கள் கழித்து, தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என்றும், தன்னை அவமானப்படுத்தினர் என்றும் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சமாதி முன்னால் தியானம் செய்ததன் பின்னர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு பெருகியதுடன், அதிமுகவும் இரண்டாகப் பிளவுபட்டது.
தற்காலிக பொதுச் செயலாளராக பதவி வகித்த சசிகலா, முதலமைச்சராக இருந்த கனவும் கலைந்து போக, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பும் வெளிவர, சசிகலாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த சனிக்கிழமை சட்டமன்றத்தில் அவர் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்து, ஆட்சியை தொடர்ந்து செல்கிறார்.
ஆனால், தமது கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தினர் என்றும், கட்சியின் விதிக்கு மாறாகச் செயற்பட்டனர் என்றும் அதிமுகவின் சசிகலா ஆதரவு தரப்பினர் கொதித்துப் போயிருந்தனர்.
பன்னீர்செல்வம் உட்பட 11 பேரின் பதவிகள் பறிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக அவர்கள் இருந்தனர்.
ஆனால், தற்போதுள்ள அரசியல் சூழலில் பன்னீர்செல்வம் உட்பட 11 பேரின் பதவி பறிக்கப்படுவதை அ.தி.மு.க நிர்வாகிகள் விரும்பவில்லை.
இதை பற்றி கார்டன் வட்டாரத்துக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
‘பன்னீர்செல்வம் உள்பட 11 பேரையும் பதவியில் இருந்து நீக்கிவிட்டால், விரைவில் இடைத் தேர்தல் வரும். மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஆதரவான சூழல் நிலவி வருகிறது.
தேர்தலை எதிர்கொண்டால், விளைவுகள் எப்படி இருக்கும் என சொல்லித் தெரியவேண்டியதில்லை.
எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அமைதியாக இருப்பதே எதிர்காலத்துக்கு நல்லது’ எடப்பாடி பழனிசாமி சார்பில் இந்த தெளிவான அரசியல் நகர்வை விளங்கப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கார்டன் நிர்வாகத்தில் உள்ளவர்களும் இந்தக் கூற்றை ஏற்றுக்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, இப்போதைக்கு பன்னீர்செல்வம் மீதான நடவடிக்கை எடுப்பது குறித்து சற்று நிதானத்தோடு செயற்படும் முடிவு எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளாராம். அதற்கு சரியான பதிலும் வந்திருக்கிறதாம்.
எனினும், பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளுநரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
சட்டமன்றத்தில் நடைபெற்றது ஜனநாயகப் படுகொலை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாடகை நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.