பன்னீர் செல்வத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஜெயலலிதா: அப்செட்டான சசிகலா

கடந்த 20 நாட்களாக நிலவி வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்களை ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் ஆளுநர்.

ஆனால், ஆளுநரின் இந்த முடிவால், சசிகலா அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

“முதல்வர் ஆலோசனையின்படிதான், ஓ.பி.எஸ் வசம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டதா?” என்ற கேள்வியை அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேள்வி எழுப்புகையில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்த நிலையைவிட, நேற்று காலை முதலே முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூச்சுத் திணறல் பெருமளவு குறைந்துவிட்டது.

‘1984-ம் ஆண்டு மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்று வந்தபோது, நாவலர் நெடுஞ்செழியன் முதல்வரின் இலாகாக்களை கவனித்தார். அதேபோல், ‘ யாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது’ என்ற விவாதம் சில நாட்களாக நடந்து வந்தது. ஆனால், சசிகலாவின் சாய்ஸாக ஓ.பி.எஸ் ஒருபோதும் இருந்ததில்லை.

ஆளுநரை சந்திக்கும்போதுகூட எடப்பாடி பழனிச்சாமியையும் உடன் அனுப்பி வைத்தார் சசிகலா. இதனால், ‘எடப்பாடிக்கு முக்கியத்துவம் கிடைக்கலாம்’ என்றுதான் எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நேற்று மதியம் கண்விழித்த முதல்வர் சசிகலாவை மட்டும் சந்தித்திருக்கிறார். அதன்பின் ஓ.பி.எஸ் வசம் பொறுப்புகள் ஒப்படைக்க, முதல்வர் கிரீன் சிக்னல் கொடுத்தார்” என விவரித்தவர்,

“மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே, சசிகலா உறவினர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டார் ஓ.பி.எஸ். மருத்துவமனை வளாகத்தில் அவருக்கு உரிய மரியாதைகள் அளிக்கப்படவில்லை. அவரைச் சுற்றியும் ஏராளமான உள்குத்துகள் நடந்து வந்தன. ‘எடப்பாடி பவருக்கு வரப் போகிறார்’ என்றுதான் அடிமட்டம் வரையில் பேசப்பட்டது. காரணம். டி.டி.வி.தினகரன், திவாகரன் உள்பட சசிகலா உறவினர்கள் அனைவருக்குமே, ஓ.பி.எஸ் மேல் கடும் கோபம். ‘தங்களால் வளர்ந்தவர், கையைவிட்டுப் போய்விட்டார்’ என்ற ஆதங்கம்தான்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், கார்டன் வட்டாரத்தின் கடும் கோபத்துக்கு ஆளானார். அவரது மகன் உள்பட உறவினர்கள் பலர் மீதும் நடவடிக்கைகள் பாய்ந்தன. ஓ.பி.எஸ்க்கு எதிராக அவரது தேனி மாவட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வனை வளர்த்துவிட்டனர். தேர்தல் நேரத்தில்கூட கட்சிக்காரர்கள் சரியாக வேலை பார்க்கவில்லை. கடந்த மாதம் வரையிலும் ஓ.பி.எஸ் பற்றி தாறுமாறாக பேசி வந்தார் தமிழ்ச்செல்வன்.

அதேநேரத்தில், கார்டன் வட்டாரத்தின் கடும் கோபத்துக்கும் ஆளானார். இதுதொடர்பாக, இரண்டு முறை முதல்வரை நேரில் சந்தித்து விளக்கம் கொடுக்க மனு கொடுத்தார். இரண்டு முறையும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அந்தக் கடிதத்தில், ‘அம்மா உங்களை சந்தித்து விளக்கம் கொடுப்பதற்கு மட்டும் நேரம் அளியுங்கள். எல்லாவற்றுக்கும் பதில் கொடுக்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு முறையும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், முதல்வரின் தேர்வாக ஓ.பி.எஸ் இருக்க ஒரே காரணம், ‘நம் கையை விட்டு அவர் செல்ல மாட்டார்’ என்கின்ற முதல்வரின் நம்பிக்கைதான். இதனால், மன்னார்குடி வகையறாக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்” என விரிவாக பேசி முடித்துள்ளார்.

– Vikatan