தலிபான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பிறகு முதல் முதலாக மலாலா யூசுப் அவரது பெற்றோருடன் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
பாகிஸ்தான் ஸ்வாட் பகுதியை சேர்ந்த மலாலா பெண் கல்வியை ஆதரித்து குரல் கொடுத்து வந்தார். பத்திரிகைகளிலும் கட்டுரை எழுதினார்.
இதனால், தலிபான் பயங்கரவாதிகள் 2012-ம் ஆண்டு அவரை துப்பாக்கியால் சுட்டனர். அந்த தாக்குதலில் மலாலா பலத்த காயமடைந்தார். மேலும், அவரின் மூளையில் வீக்கம் ஏற்படுவதை தடுக்க மண்டை ஓட்டின் ஒரு பகுதியை நீக்கும் நிலை ஏற்பட்டது.
பாகிஸ்தானின் ராணுவ மருத்துவமனையில் அவசரகால சிகிச்சைக்கு பிறகு அவர் பிரிட்டனுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தனது குடும்பத்துடன் பிரிட்டனில் வசித்து வருகிறார்.
2014-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு பெண் கல்வி உரிமைக்காகவும், குழந்தைகள் கல்விக்காகவும் தொடர்ந்து ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். ஐ.நா.வின் இளைஞர் தூதராகவும் அவர் இருக்கிறார்.
இந்நிலையில், தாக்கப்பட்ட பிறகு முதல் முதலாக அவர் பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருடன் அவரது பெற்றோரும் வந்துள்ளனர். 4 நாள் பயணமாக அவர் வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அவரது சுற்றுப்பயணம் முழுவதும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவர் பிரதமர் அப்பாசி மற்றும் முக்கிய தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.