165 பயணிகளை ஏற்றிக் கொண்டு வானில் பறந்து கொண்டிருந்த விமானம் மீது ஆளில்லா குட்டி விமானம் மோதி விபத்துகுள்ளாக இருந்த சம்பவம் அதிர்ஷ்டவசமாக தடுக்கப்பட்டது.
A320 என்ற பயணிகள் விமானம் 165 பயணிகளுடன் மத்திய லண்டன் வழியாக வானில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது ஐரோப்பியாவின் மிக உயர்ந்த கட்டிடமான Shard அருகே விமானம் சென்று கொண்டிருந்த போது, இந்த விமானத்தின் அருகே விமான நிலையத்தில் இறங்கும் விமானங்களை படம் பிடிக்கும் ஆளில்லா குட்டி விமானம் ஒன்று வந்தது.
அதை விமானி ஜன்னல் மூலமாக பார்த்து சரியாக செயல்பட்டதால் அந்த குட்டி விமானமானது பயணிகள் விமானத்தின் மீது மோதாமல் சென்றது. இதனால் அங்கு நடக்கவிருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
இது குறித்து பயணிகள் விமானத்தை ஓட்டிய விமானி கூறுகையில், அந்த குட்டி ஆளில்லா விமானமானது எங்கள் விமானத்தின் அருகில் வெறும் 20 மீட்டர் இடைவெளியில் தான் இருந்தது.
இன்னும் சிறிது அருகில் வந்து உரசியிருந்தால் மிகப் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என கூறியுள்ளார்.
இது குறித்து விமான துறை அதிகாரிகள் கூறுகையில், இது போல சம்பவம் இதற்கு முன்னர் இரண்டு முறை நடந்துள்ளது. அதிலிலும் அதிஷ்டவசமாக விபத்துக்கள் ஏற்படவில்லை.
இது போல பயணிகள் விமானம் அருகில் ஆளில்லா விமானத்தை விடுவது குற்றமாகும். இதற்கு சிறை தண்டனை வழங்க கூட சட்டத்தில் இடமுள்ளது என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் சேர்த்து இதற்கு முன்னர் நடந்த இரு சம்பவத்திலும் ஆளில்லா குட்டி விமானங்களை வானில் விட்டவர்களின் விபரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.