காலநிலை மாற்றம் குறித்த 2015 ஆம் ஆண்டு பரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாய் அறிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தக நடவடிக்கைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் அனுகூலமான வகையிலான நியாயமான புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளை நோக்கி நகரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூழல் வெப்பமடைவதன் காரணமாக உலகிற்கு தீங்கு ஏற்படும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் 2015ஆம் ஆண்டு காலநிலை மாற்ற உடன்படிக்கை பரிஸில் ஏற்படுத்தப்பட்டது.
இதன்படி பாரிய தொழிற்சாலைகளுக்கான கார்பன் வெளியேற்ற கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் இணக்கம் கண்டிருந்தன.
ஆனால் காலநிலை மாற்றம் குறித்த விடயத்தில் நம்பிக்கை இல்லாத டொனால்ட் ட்ரம்ப், இதனை இரத்து செய்து அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் நிலக்கரி தொழிற்சாலைகளுக்கு வாய்ப்பு வழங்கவிருப்பதாக தேர்தல் காலத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்த பரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.