பருப்பு மற்றும் தக்காளி விலைகள் உயர்வு

இந்தியாவில் பருப்பு விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கிலோ பருப்பு ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல சமீபகாலமாக தக்காளி விலையும் வரலாறு காணாத வகையில் கிலோ ரூ.100 அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுகளால் மத்திய அரசு கவலை அடைந்துள்ளது.

விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக டெல்லியில் நிதி மந்திரி அருண் ஜெட்லி ஒரு உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் வேளாண்மைத் துறை மந்திரி ராதாமோகன் சிங், உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான், போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரி, வர்த்தகத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ஊரக மேம்பாட்டு மந்திரி வெங்கையா நாயுடு மற்றும் துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் விலை உயர்ந்துள்ள பருப்பு, தக்காளி போன்ற பொருட்களின் நிலவரம், இந்த விலை உயர்வுக்கான காரணம், விலையை கட்டுப்படுத்துவது எப்படி? என விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பருப்பு தேவையான மாநிலங்களுக்கு கூடுதலாக அனுப்புவது, பருப்பு விலையை கட்டுப்படுத்த மியான்மர், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து பருப்புகளை இறக்குமதி செய்வது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:-

போதுமான அளவுக்கு இருப்பு வைக்கும் அளவுக்கு பருப்பு கூடுதலாக கொள்முதல் செய்ய உணவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வருடம் 1.5 லட்சம் டன் பருப்புகள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1.15 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

பருப்பு அதிகம் விளையும் மியான்மர், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஒரு குழுவை உடனடியாக அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள் அரசுகளுக்கு இடையே பருப்பு இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமும் பருப்பு இறக்குமதி ஊக்குவிக்கப்படும்.

அரசு நிறுவனங்கள் மூலம் துவரை, உளுந்து போன்ற பருப்புகளை நிலையாக கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஏற்கனவே 10 ஆயிரம் டன் பருப்புகளை சூழ்நிலைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.

பருப்புகள் தவிர தக்காளி, சர்க்கரை, கோதுமை ஆகியவைகளின் விலை உயர்வு குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தக்காளி பயிர்கள் சேதம் காரணமாக அதன் விலை இரண்டு மடங்கு அதிகரித்து கிலோ ரூ.100 வரை விற்கிறது. பருவகால பிரச்சினைகள் மற்றும் இதர பொருட்கள் போல் அல்லாமல் குறைவான ஆயுள் போன்றவை தான் தக்காளி விலை உயர்வுக்கு காரணம்.

தனது அமைச்சகம் பருப்புகள், சர்க்கரை, கோதுமை, தக்காளி மற்றும் இதர அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.