பர்மா பற்றி இலங்கை அரசு வாய் திறக்குமா?

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைமையில் மியன்மாரில் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் இனப் படுகொலைகளை கண்டித்தும், இக் கொடுமைகளுக்கு எதிராகவும், இலங்கை அரசு கண்டனத்தை வெளியிட வேண்டுமெனக் கோரியும் மாபெரும் பேரணியும், ஆர்ப்பாட்டமும் காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (29) ஜூம்ஆ தொழுகையின் பின் இடம்பெற்றது.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டத்தில், பெரும் திரளான மக்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் “பர்மா பற்றி இலங்கை அரசு வாய் திறக்குமா?”, “ஐ.நா.வே பர்மா பற்றி உன் நிலைப்பாடு என்ன?”, “மியன்மார் பௌத்த அரசே முஸ்லிம்களின் மீது கை வைக்காதே, அவர்கள் எம் சகோதரர்கள்”, “இலங்கை அரசே மியன்மார் தீவிரவாதி அசின் விராதுவை எம் நாட்டுக்குள் அனுமதிக்காதே”, போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பல்வேறு தமிழ், சிங்கள, ஆங்கில பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

பின் மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பில் மூன்று கோரிக்கைகள் அடங்கிய மஹஜரை தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் உப தலைவர் மௌலவி எம்.சீ.எம்.ஸஹ்றான் (மஸ்ஊதி) காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலிடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தார்.