பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து வீட்டு வளாகத்தில் வீழ்ந்த அவசரகால வெளியேற்ற சாதனம்

அரிஸோனா மாநிலத்தில் பறந்துகொண்டிருந்த போயிங் 767 ரக விமானமொன்றிலிருந்து அவசர நிலைமைகளின்போது தப்பிச்செல்வதற்கு பயன்படுத்தப்படும் ஸ்லைட் எனும் பாகம் வீழ்ந்துள்ளது. அட்லஸ் எயார் நிறுவனத்துக்குச் சொந்தமான இவ் விமானம் சம்பவம் இடம்பெற்ற வேளையில், 2,800 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்விமானத்தில் 17 ஊழியர்கள் இருந்தனர்.

ஆனால், பயணிகள் எவரும் இருக்கவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரிஸோனா மாநிலத்தின் பீனிக்ஸ் நகர விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முற்பட்ட வேளையிலேயே இவ் விமானத்தின் அவசரகால வெளியேற்ற வழியான  “ஸ்லைட்” செயற்பட ஆரம்பித்து வானிலிருந்து வீழ்ந்துள்ளது.

இந்த ஸ்லைட் வீழ்ந்த வீட்டில் வசிக்கும் 31 வயதான அன்ட்ரியா செல்ஷப் எனும் பெண் இது தொடர்பாக கூறுகையில், “பெரும் சத்தத்தத்துடன் வீட்டின் மீது ஏதோ பொருள் வீழ்ந்தபோது வீடு அதிர்ந்தது.

வெளியே சென்று பார்த்தபோது, வெள்ளி நிறத்திலான பாரிய பொருளொன்று வீழ்ந்து கிடந்தது” என தெரிவித்துள்ளார். இதிலிருந்து கந்தக மணம் வீசியதை தான் உணர்ந்ததால் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தாகவும் அவர் கூறினார்.

இச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், மரமொன்று சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அமெரிக்க வான் போக்குவரத்து நிர்வாகத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.