அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக பலஸ்தீன் தொடர்பான யுனெஸ்கோ வாக்கெடுப்பில் இலங்கை பங்கேற்காமல் தவிர்ந்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்துள்ளார்.
பலஸ்தீனுக்கு ஒத்துழைப்பு வழங்கும் இலங்கை கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது எனவும் வாக்களிப்பதில் இருந்து தவிர்ந்தமையானது, எதிராக வாக்களித்ததாக பொருள்படாதெனவும் குறிப்பிட்டார்.
23/2 நிலையியற் கட்டளையின் கீழ் தினேஷ் குணவர்தன எம்.பி. எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் நேற்று(22) பதிலளித்தார், இங்கு காணப்படும் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணமுடியாதுள்ளது. அந்நிலையிலே இலங்கை வாக்கெடுப்பில் இருந்து தவிர்த்துக் கொண்டது.
அமெரிக்காவின் அழுத்தத்திற்கு நாம் அடிபணிந்து இவ்வாறு வாக்கெடுப்பில் இருந்து தவிர்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறோம். எவரின் அழுத்தத்திற்கும் அடிபணிந்து நாம் இந்த முடிவை எடுக்கவில்லை.
இலங்கை, பலஸ்தீன் தொடர்பான நிலைப்பாட்டை மாற்றவில்லை. 13 அணிசேரா நாடுகள் இந்த வாக்கெடுப்பில் இருந்து தவிர்ந்து கொண்டன. இலங்கை தனது அணிசேரா நிலைப்பாட்டில் இருந்து ஒதுங்கவில்லை.
பலஸ்தீனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் கொள்கையை இலங்கை தொடர்ந்து பேணி வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையின் கீழ் எமது அரசாங்கமும் அதே கொள்கையையே பேணி வருகிறது.
மேலும், 2012ல் பலஸ்தீனத்திற்கு ஐ.நா.வில் அங்கத்துவமில்லா இடம் வழங்க இலங்கை ஆதரவு வழங்கியது. பலஸ்தீனத்திற்கு கண்காணிப்பு அங்கத்துவம் வழங்கவும் இலங்கை ஆதரவு வழங்கியது. பலஸ்தீன் கொடி ஐ.நா.வில் ஏற்றப்படுவதற்கு இலங்கை முக்கிய பங்காற்றியது.
ஜெருசலத்தை தலைமையாகக் கொண்டு பலஸ்தீனத்தை தனிநாடாக அறிவிக்க பேச்சுகள் நடைபெறுகின்றன. பலஸ்தீனம் தொடர்பிலான ஐ.நா. யோசனைகளுக்கு இலங்கை ஆதரவு வழங்கி வந்துள்ளது.
எமது சக நாடுகளுடன் மோதலில் ஈடுபட முடியாது. சிலர் மறைவான நிகழ்ச்சி நிரலின் கீழ் மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்த முயல்கின்றனர். நாம் ஒவ்வொரு நாட்டுடனும் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறோம். மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துகள் மூலம் எமக்கும் சர்வதேச சமூகத்திற்குமிடையிலான நல்லுறவை குழப்ப சதி செய்கின்றனர்.
பலநூறு வருடங்களாக சிங்கள, முஸ்லிம் மக்கள் நல்லுறவுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடையே மோதல் ஏற்படுத்த சதி நடைபெறுகிறது. கண்டியில் பள்ளி வீதி என்ற பெயர்ப்பலகையை அகற்றி முஸ்லிம் மக்களுக்கு இங்கு வாழ உரிமை கிடையாது என்ற தவறான தகவலை பரப்ப முயல்கின்றனர். இதன் பின்னணியில் மஹிந்த ஆதரவு அணி எம்.பி. யின் குழுவினரே உள்ளனர்.
நாமல் ராஜபக்ஷவின் நீலப்படை முக்கியஸ்தர் ஒருவர் முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பொன்றை உருவாக்க முயன்று வருகிறார். இவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். முஸ்லிம் அடிப்படைவாதத்தை பரப்புவோரும் கைதாகியுள்ளனர். இனஉறவுக்கு பங்கம் ஏற்படாது ஒற்றுமையுடன் வாழ இடமளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.