பல்கலைகக்கழக மானிய ஆணைக்குழுவின் நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவை சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.
குறித்த இந்நிதியங்களில் இருந்து 100 கோடி ரூபாவிற்கும் மேலதிகமான பணம் பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது என இலங்கை மனித உரிமைகள் கேந்திரம் நிலையம் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது.
ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து பணம் பெறும் திட்டம் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும். இதற்காக விசேட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விடயத்தில் தமக்கு எதுவித தொடர்பும் கிடையாது என அமைச்சர் கூறினார். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை இது பற்றிய தீர்மானங்களை மேற்கொண்ட சமயம் தாம் அமைச்சராகவும் இருக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.