சொத்தை பற்கள் உண்டாக முக்கிய காரணம் என்னவென்றால், இனிப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடுவது தான். இதற்கு உணவு உண்ட பிறகு வாயை நன்றாக கொப்பளிப்பது அவசியம். பற்களில் தங்கியுள்ள உணவுகளினால், பாக்டிரியாக்கள் வளர தொடங்கிவிடும். இதனால் பற்கள் சொத்தையாகிவிடும்.
இந்த சொத்தை பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால், காலப்போக்கில் பற்களில் பெரிய ஓட்டை விழுந்துவிடும். மேலும் இது ஈறுகளின் மீதும் பரவி விடும். இதற்காக நீங்கள் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. உங்களது அன்றாட வாழ்வில் சில மாற்றங்களையும், சில வீட்டு வைத்திய குறிப்புகளையும் பின்பற்றினாலே போதுமானது.
1. சூவிங் கம் [chewing gum]:
சுகர் ப்ரீ [sugar free]சூவிங் கம்மை உணவு உண்ட பிறகு வாயில் இட்டு மெல்லலாம். இது வாயில் உள்ள பி.எச் அளவை சமநிலைக்கு கொண்டு வரும். இதனால் பல் வலி, பல் சொத்தை ஆகியவற்றில் இருந்து விடுபடலாம்.
2. ஆயில் புல்லிங்:
தினமும் காலையில் நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் ஆயில் புல்லிங் செய்து வரலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பற்கள் சொத்தையாவதை தடுக்கலாம். பற்களின் ஆரோக்கியத்துடன் சேர்ந்து உடலின் ஆரோக்கியமும் மேம்படும்.
3. இஞ்சி சாறு:
இஞ்சிச்சாற்றை இலேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். சுக்கு வீக்கதிலுள்ள நீரை உறிஞ்சி, பல் வலியை போக்கும்.
4. கல்சியம் உணவுகள்:
பல் வலி உள்ளவர்கள் அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். கல்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவு வகைகளை உண்ணவும். நெல்லிக்காய், பால், வெண்ணெய், எலுமிச்சை போன்றவற்றை முறையாக உண்டு வர பற்கள் பலமடையும்.
5. ஐஸ் கட்டிகள்:
ஐஸ் கட்டிகளை எடுத்து பல் வலியுள்ள இடத்தில் வைத்து எடுக்க சிறிது நேரத்தில் பல் வலி குறைந்து, வீக்கமும் வற்றிவிடும்.
6. உப்பு தண்ணீர்:
தினமும் பல் துலக்கும் முன்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து, வாய் கொப்பளிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது பற்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். மூன்றுவேளையும் உணவு உண்ட பிறகு இவ்வாறு செய்வது சிறப்பு.