பாகிஸ்தானுடன் அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் பற்றி ஆராயும்?

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே 2005-ம் ஆண்டு, ஜூலை 18ம் திகதி அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கும், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சும் கையெழுத்திட்டனர். அதன் தொடர்ச்சியாக 2008-ம் ஆண்டு, அக்டோபர் 10ம் திகதி மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த பிரணாப் முகர்ஜிக்கும், அமெரிக்க வெளியுறவு மந்திரி பதவி வகித்த கண்டலிசா ரைசுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்பின்னர், அணு உலையில் விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்படுகிறவர்களுக்கு யார் இழப்பீடு வழங்குவது என்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் குடியரசு தின விழா விருந்தினராக இந்தியா வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சு வார்த்தை நடத்தியபோது சிவில் அணுசக்தி உடன்பாட்டை முன்னோக்கி எடுத்துச்செல்ல முடிவு செய்தனர்.

இதேபோன்று பாகிஸ்தானும், அமெரிக்காவுடன் ஒரு சிவில் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள விரும்பி, தொடர்ந்து அந்நாட்டை வலியுறுத்தி வந்தது.

ஆனால் இந்தியாவைப் போன்றே, பாகிஸ்தானுடன் சிவில் அணுசக்தி உடன்பாடு செய்து கொள்ள முடியாது என்று அமெரிக்கா கூறி வந்தது. இதற்கு பாகிஸ்தான் அணுசக்தி திட்ட தலைவர் டாக்டர் ஏ.கியூ.கான், அணுசக்தி தொழில் நுட்பத்தை ஈரான், லிபியா, வட கொரியாவுக்கு விற்பனை செய்ததை அமெரிக்கா காரணமாக காட்டி வந்தது.

ஆனால் தற்போது பாகிஸ்தானுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த மாதம் 22ம் திகதி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், வாஷிங்டன் செல்கிறபோது இது தொடர்பாக அவருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படலாம் என ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளேடு கூறியுள்ளது. அதில், “இந்தியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு எதிராக பாகிஸ்தான் தனது பாதுகாப்பு தேவைக்காக மட்டும் என்ற அளவில் அணுசக்தி திட்டத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும்” எனவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளரிடம் கேள்வி எழுப்பியபோது அவர், “பாகிஸ்தான் பிரதமர் இங்கு வரவிருப்பதால், அந்நாட்டு அரசுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து தொடர்பில் இருந்து வருகிறோம்” என பதில் அளித்தார். அதே நேரம், பாகிஸ்தான் பிரதமருடன் நடத்தப்படுகிற பேச்சு வார்த்தையில் இடம்பெறப்போகிற குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து எதுவும் குறிப்பிட முடியாது என மறுத்து விட்டார்.

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஜலில் அப்பாஸ் ஜிலானி கருத்து தெரிவிக்கையில், “பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம், எங்கள் சட்டப்படியான பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் உறுதிபடுத்தப்படுவது ஆகும். தனது தேசிய பாதுகாப்பில் பாகிஸ்தான் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது” என குறிப்பிட்டார்.

 

(riz)