பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் அப்ரிடி ஓய்வு..

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் ஷஹிட் அப்ரிடி, சர்வதேசப் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு பெறவுள்ளதாக, பாகிஸ்தானிலிருந்து வரும் ஊடக அறிக்கைகள் மேற்கோள்காட்டி செய்தி தெரிவிக்கின்றன.

அப்ரிடி, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று, பின்னர் மீள்வருகைகளைப் புரிவது வழக்கமாகும். தற்போது அவர், டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் அவர் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்த போதிலும், அண்மையில் இடம்பெற்ற இங்கிலாந்துக்கெதிரான தொடரில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், இம்மாத இறுதியில், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில் ஷஹிட் அப்ரிடி சேர்க்கப்படவுள்ளதாகவும் அந்தத் தொடரின் முடிவில், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட குழாமில், அப்ரிடி சேர்க்கப்படாத போதிலும், இந்தத் தொடருக்காக அவர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.