பாகிஸ்தான் அரசு நிர்வாகத்துக்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல்..

பாகிஸ்தான் அரசு நிர்வாகத்துக்கும் ராணுவத்திற்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் சில வாரங்களுக்கு முன்னர் தனியார் செய்தி நாளிதழ் ஒன்றில் இராணுவம் குறிப்பிட்ட சில தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், அதற்கு பிரதமர் நவாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ராணுவத்துக்கும் அரசுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த விவகாரம் பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் பிரதமர் நவாசின் வெளியுறவு விவகார ஆலோசகர் தாரிக் பத்தேமி, அந்த நாளிதழ் நிருபருடன் தகவல்களை பகிர்ந்து கொண்டிருப்பது சிறப்பு கமிட்டியின் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தாரிக் பத்தேமி மற்றும் மூத்த அரசு அதிகாரி ராவ் தெசின் அலி ஆகியோர் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் அரசின் நடவடிக்கையில் பாகிஸ்தான் இராணுவம் திருப்தி அடையவில்லை.

நவாஸ் ஷெரீப் அரசு உண்மைகளை மூடி மறைக்கிறது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது என்று பாகிஸ்தான் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் இராணுவ தலைமை தளபதி காமர் ஜாவித் பத்வா, அரசின் நடவடிக்கைகள் ஏற்புடையதாக இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)