பாகிஸ்தான் படைகள் தொடர் தாக்குதல் – 84 பாடசாலைகளுக்கு விடுமுறை…

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதால் எல்லைப்பகுதியை அண்மித்துள்ள 84 பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று ரஜோரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களுக்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. ரஜோரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒரு இராணுவ கேப்டன் உட்பட இந்திய இராணுவத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் அத்துமீறல் தொடரும் நிலையில், அங்குள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளமையினால், ராஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சுமார் 84 பாடசாலைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 3 தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.