பாகிஸ்தான் ஹாக்கிக்கு கருப்பு தினம் – ஒலிம்பிக் வாய்ப்பு கை நழுவியது

பெல்ஜியத்தில் நடைபெறும் உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டிகளில் அயர்லாந்து அணியிடம் 0-1 என்று தோற்ற பாகிஸ்தான் அடுத்த ஆண்டு ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

ஹாக்கி விளையாட்டில் சாம்பியன்களாகத் திகழ்ந்து வந்த பாகிஸ்தான் அணி இன்று புதிய தாழ்வுக்கு வீழ்ந்துள்ளது.

6-வது இடத்துக்குக் கீழே செல்லாமல் இருந்தால் மட்டுமே ஒலிம்பிக் வாய்ப்பு பெற முடியும் நிலையில் இருந்த பாகிஸ்தான் அயர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி கண்டு ஒலிம்பிக் வாய்ப்பை இழந்ததால் இன்றைய தினம் பாகிஸ்தான் ஹாக்கிக்கு ஒரு கருப்பு தினமே.
3 முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற பாகிஸ்தான் அணி, ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு நல்ல அணியாக இருந்து வந்தது.

கடந்த ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகளுக்கு முதல் முறையாகத் தகுதி பெறாமல் போனதையடுத்து தற்போது ஒலிம்பிக்கிலும் பாகிஸ்தான் அணியின் விறுவிறு ஆட்டத்தை நாம் பார்க்க முடியாது போயுள்ளது. உலகக் கோப்பையை மற்ற நாடுகளை விட பாகிஸ்தான் அதிக முறை வென்றுள்ளதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

இது குறித்து பாகிஸ்தான் கெப்டன் முகமது இம்ரான் கூறுகையில், “பாகிஸ்தான் ஹாக்கிக்கு இது வருத்தமான நாள், இந்தப் போட்டியில் எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் அவற்றை வெற்றியாக மாற்றத் தவறினோம். இந்தத் தொடர் முழுதுமே நாங்கள் சொதப்பலாகவே ஆடினோம். பாகிஸ்தானில் உள்ள ஹாக்கி ரசிகர்களுக்காக நான் வருந்துகிறேன்” என்றார்.

(riz)