(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க இராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மோதல் வெடித்தது. ஈராக்கில் இருக்கும் ஈரான் ஆதரவு பிரிவினைவாதிகள் அங்குள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் ஆகஸ்ட் 31ம் திகதி தலைநகர் பாக்தாத்தில் வெளிநாட்டு தூதரகங்கள், அரசு நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ள பசுமை மண்டலத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ராக்கெட்டு அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் உள்ள காலியான வீட்டின் மீது விழுந்து வெடித்துச் சிதறியதாக ஈராக் இராணுவம் தெரிவித்தது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் உயிர் இழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.
இந்நிலையில் ஈராக்கில் தலைநகரில் பாக்தாத்தில் உள்ள தூதரகத்தில் இருந்து முழுமையாக விலக திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க நிர்வாகம் அதை மறுபரிசீலனை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமியின் செய்தித் தொடர்பாளர் அகமது முல்லா தலால் தெரிவித்துள்ளார். மேலும் தூதரகத்தை மூடுவது அவர்களுக்கு எதிர்மறையாக அமையும் எனத் தெரிவித்திருந்தார்.