கல்வி அமைச்சின் அனுமதியின்றி, பாடசாலை மாணவர்களிடமிருந்து, அப்பாடசாலை நிர்வாகத்தினரால் பணம் அறிவிடப்பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில், உயர்தரத்துக்கான கல்வியைத் தொடர்வதற்காக, வேறு பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் அம்மாணவர்களிடம் இருந்து, பாடசாலையினால் அறவிடப்படும் தொகை தொடர்பான முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை, தன்னிடம் கையளிக்குமாறும் கல்வி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக, பாடசாலை அபிவிருத்திக்கென எவரேனும் பணம் திரட்டுவார்களாயின், அதற்கு கல்வி அமைச்சின் செயலாளரோ அல்லது கோட்டக் கல்வி வலயத்தின் செயலாளராலோ, அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியது.