எச்.ஐ.வி. உட்பட சகல நோய்கள் சம்பந்தமாகவும் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இரத்தப் பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த ஐந்து வருடங்களில் 2 ஆயிரத்து 265 பேர் ஐ.எச்.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும், அவர்களில் 20 பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குகின்றனர் என்றும் அவர் கூறினார்.
இன்னும், நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட எம்.பி. டலஸ் அழகப்பெரும் எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சுகாதார அமைச்சர் மேற்படி தகவல்களை வெளியிட்டார்.
டலஸ் எம்.பி. எழுப்பிய கேள்விகளும் அவற்றுக்கு சுகாதார அமைச்சர் வழங்கிய பதில்களும் வாசகர்களின் கவனத்திற்கு:-
கேள்வி: 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலத்தினுள் இணங்காணப்பட்டுள்ள எச்.ஐ.வி. தொற்றியவர்களின் எண்ணிக்கை?
பதில்: 2 ஆயிரத்து 265 பேர். (2010 – 121 பேர், 2011 – 144 பேர், 2012 – 182 பேர், 2013 – 196 பேர், 2014 – 228 பேர், 2015 ஒக்டோபர் 30 வரை 191 பேர்)
கேள்வி: தற்போது இனங்காணப்பட்டுள்ள மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் எவ்வளவு?
பதில்: 9 வயது வரை 71 பேர், 10 வயதில் 14 7 பேர், 15 வயதிலிருந்து 19 வரை -13 பேர், 20 வயதிலிருந்து 29 வரை 478 பேர், 30 வயதிலிருந்து 39 வரை 822 பேர், 40 வயதுக்கு மேல் 817 பேர்.
கேள்வி: இவர்களுக்கு மத்தியில் உள்ள பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை?
பதில்: 20
அத்துடன், டலஸ் எம்.பி. எழுப்பிய இடையீட்டுக் கேள்விகளுக்கு சுகாதார அமைச்சர் வழங்கிய பதில்கள் வருமாறு:
வயது எல்லை 15 இனை விட குறைந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ள பிள்ளைகள் அனைவரும் தாயினூடாக எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்கானவர்களாகும்.
எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியும் இனங்காணப்படாதவர்களின் எண்ணிக்கைப் பற்றி சரியாக குறிப்பிட முடியாதுள்ளது. குறிப்பாக நோய் இருக்கின்றது என தெரிந்தும் பயம், சமூகப் பிரச்சினை காரணமாக பலர் சிகிச்சைப் பெறாமல் இருக்கின்றனர்.
இதனால், சுகாதார அமைச்சு முடிவொன்றை எடுத்துள்ளது. அதாவது, பாடசாலை, பல்கலைக்கழக மாணவரகளுக்கு வெளிப்படையாக எச்.ஐ.வி. பரிசோதனை என கூறாது சகல நோய்கள் சம்பந்தமாகவும் இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த இரத்தப் பிரிசோதனை செய்திருந்தால் மாத்திரமே உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்லமுடியும்.
பாலியல் சம்பந்தமான நோய்கள் அதிகரித்துள்ளன. இவை தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும்.
இவை தொடர்பிலும் தொற்று அல்லாத நோய்கள் சம்பந்தமாகவும் பாடப்புத்தகத்தில் விடயதானங்களை உட்புகுத்துவது பற்றி கல்வி அமைச்சுடன் பேச்சு நடத்தப்படுகின்றது. சுகாதார பாடமானது இனிவரும் நாட்களில் கட்டாயப் பாடமாக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.