பாண்டியாவின் அபார ஆட்டத்தினால் சுருண்டது டெல்லி அணி

டெல்லி அணிக்கெதிரான IPL போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IPL தொடரின் 47வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதியது. விசாகப்பட்டினம் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான அணித்தலைவர் ரோகித் ஷர்மா 31 ஓட்டங்களும், மார்டின் குப்தில் 48 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய பாண்டியா அரைசதம் கடந்து 86 ஓட்டங்களும், ஆட்டமிழக்காமல் ஜோஸ் பட்லர் 18 ஓட்டங்களும், அம்பதி ராயுடு 13 ஓட்டங்களும் எடுத்தனர்.

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் எடுத்தது. பந்துவீச்சில் டெல்லி அணி சார்பில் கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 207 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதிகபட்சமாக குயின்டன் டிகாக் 40 ஓட்டங்களும், ரிஷப் பன்ட் 23 ஓட்டங்களும், கிறிஸ் மோரிஸ் 20 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் மும்பை அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டும், பாண்டியா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

மும்பை அணியின் பாண்டியா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.