பாதங்கள் அழகாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது மட்டுமல்ல.. பாதங்களை சுத்தமாக பராமரிப்பது என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் இன்றியமையாதது ஆகும். நீங்கள் வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களை கொண்டு எளிதான முறையில் சில விஷயங்களை தொடந்து செய்து வந்தால் உங்களது பாதங்களில் உள்ள வெடிப்புகளில் இருந்து விடுதலை பெறலாம்.
பீர்க்கங்காய் நார்:
பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.
பாத நகங்களின் அழுக்கை அகற்ற:
பாத நகங்களின் இடுக்குகளில் அழுக்குகள் எளிதில் போகாது. அவற்றை பின் வைத்து எடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக தீக்குச்சியின் கைப்பிடிக்கும் பகுதியில் நல்லெண்ணெயால் நனைத்து தீபத்தில் சூடு செய்து நக இடுக்கில் உள்ள அழுக்களை எடுத்தால் எளிதில் வெளிவந்துவிடும். நகங்களும் பளபளக்கும்.
காபி பொடி:
காபிப் பொடி சிறந்த கிளென்ஸர் ஆகும். அதனை கொண்டு வாரம் ஒருமுறை பாதங்களில் தேய்த்து கழுவினால் பாதம் சுருக்கமின்றி மிருதுவாகும்.
வெடிப்பு மறைய:
விளக்கெண்ணெய் சிறந்த முறையில் பாதங்களில் உள்ள வறட்சியை போக்கும். விளக்கெண்ணெயை நன்றாக சூடு செய்து உடனே அதில் வெள்ளை மெழுகு வர்த்தியை உதிர்த்து, பொடி செய்து போட்டால் கரைந்து விடும். இந்த கலவையை வெதுவெதுப்பான பிறகு பாதத்தில் போட்டால் பாதம் மிருதுவாகும். வெடிப்பு காணாமல் போய்விடும்.
கல் உப்பு:
கல் உப்பை நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து கால்களில் குறிப்பாக குதிகால்களில் தேய்த்து கழுவுங்கள். இதனால் குதிகால் வெடிப்பு மறைந்து இறந்த செல்கள் அகன்று மென்மையாகும்.
வியர்வை:
சிலருக்குப் பாதங்களில் அதிகமாக வியர்க்கும். அவர்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அலுமினியம் குளோரைட் ஹெக்சாஹைட்ரேட் அடங்கிய மெடிக்கேட்டட் பவுடரை பாதங்களுக்கு உபயோகிப்பதன் மூலம் வியர்வையைக் கட்டுப்படுத்தலாம்.
சுத்தம்:
தினசரி 2 வேளைகள் குளிப்பது எவ்வளவு அவசியமானதோ, அதே மாதிரிதான் கால்களைக் கழுவி சுத்தப்படுத்துவதும். குளிக்க ஆரம்பிக்கும்போதே கால்களுக்குச் சோப்பு போட்டுத் தேய்த்து, விரல் இடுக்குகளை எல்லாம் சுத்தம் செய்து ஊற விடவும். குளித்து முடித்த பிறகு கால்களை நிறையத் தண்ணீர் விட்டுக் கழுவி, நன்கு துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவும்.