பாதிக்கப்பட்ட சகல இடங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகல இடங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான நிதியை வழங்குவதற்குரிய மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

வீதிகள், பாலங்கள் என்பன தொடர்பான சேத மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளத்தால் அடிக்கடி பாதிப்புள்ளாகும், களனி பிரசேதத்தை சேர்ந்த ஆயிரம் குடும்பங்களுக்கான நிலையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படவுள்ளதுடன், அனர்த்தங்களுக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்கவென மேலதிக நிதியையும் ஒதுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக வீடுகள்; 25 இலட்சம் ரூபா வரையிலான பெறுமதிக்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளன. சேத மதிப்பீடு இன்றி இந்த பெறுமதியை வழங்க முடியாதென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மதிப்பீட்டுப் பணிகள் பூர்த்தியடையும் வரை பத்தாயிரம் ரூபாவை விட கூடுதலான பெறுமதியுடைய சேதங்களுக்காக முதல் கட்டமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதுடன், அனர்த்தங்களுக்கு உள்ளான 20 மாவட்டங்களுக்காக நான்கு கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சொத்துக்கள் பற்றிய மதிப்பீட்டு பணிகளை வெள்ள நீர் வடிந்ததுடன் ஆரம்பிக்குமாறு மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்திகரிக்கவென பத்தாயிரம் ரூபா வழங்கப்படுவதோடு பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு 25 இலட்சம் ரூபா வரையிலான உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

அனர்த்தங்களை தடுப்பதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவிருக்கிறது. 2030 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு நீர்ப்பாசனம், சுகாதாரம் உட்பட பல துறைகளை இணைத்து முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.