பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை பதவி நீக்கம் செய்யுமாறு கோரிக்கை..

பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை பதவி நீக்கம் செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றமிழைத்த இராணுவத்தினர் தொடர்பிலான தகவல்கள் இருந்தால் சமர்ப்பிக்குமாறு, பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, புலம்பெயர் அமைப்பினரிடம் கோரியிருந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு, பாதுகாப்புச் செயலாளரை பதவி நீக்கம் செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்டியில், நேற்று(22) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “இலங்கை பாதுகாப்புச் செயலாளரா அல்லது புலம் அமைப்புக்களின் ஊடகப் பேச்சாளரா இவ்வாறு கதைத்தார் என எம்மால் யூகிக்க முடியாமல் உள்ளது.

ஜனாதிபதியின் கீழ்தான் பாதுகாப்பு அமைச்சு உள்ளது. இவ்வாறான ஒரு அமைச்சின் செயலாளர் முப்படையினருக்கு எதிராக கருத்து வெளியிடுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். அவர், அன்று குடிபோதையில்தான் கதைத்தாரா எனும் சந்தேகமும் எழுகிறது.

இது 30 வருட காலமாக நாட்டில் நீடித்த யுத்தத்திற்காக உயிர் தியாகம் செய்த இராணுவத்தினருக்கு செய்த அவமரியாதையாகும். எனவே, ஹேமசிறி பெர்ணான்டோவை பதவியிலிருந்து நீக்கி, புதியவரை நியமிக்க வேண்டும் என நாம் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம்“ என தெரிவித்துள்ளார்.