பாத யாத்திரையில் இரண்டு கோடி மக்கள் பங்கேற்பு – கீதா குமாரசிங்க

கூட்டு எதிர்க்கட்சியினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாத யாத்திரையில் இரண்டு கோடி மக்கள் பங்கேற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது;

பசியை தாங்கிக்கொண்டு, மழை வெயிலை கருத்திற்கொள்ளாது கொழும்பிலிருந்து கண்டி நோக்கி வந்த கோடிக்கணக்கான மக்கள் பாத யாத்திரையில் பங்கேற்றனர்.

ஆகக்குறைந்தது இந்த பாத யாத்திரையில் இரண்டு கோடி பேர் பங்கேற்றிருப்பார்கள்.

இதனைப் பார்த்த சிலர் மண்ணெண்ணை ஊற்றப்பட்ட சாரைப்பாம்புகளைப் போன்று துடிக்கத் தொடங்கியுள்ளனர்.

துடிப்பதற்கு ஒன்றுமில்லை இதுவே மக்களின் ஆணையாகும்.

வெறுமனே மக்கள் வீதியில் இறங்கவில்லை, இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டே வீதியில் இறங்கினார்கள்.

மக்கள் எதிர்ப்பு மத்தியில் சிலர் மக்களை இழிவுபடுத்துகின்றனர். சிலர் இந்த அப்பாவி மக்களை எலிகளாக பார்க்கின்றனர்.

கோடிக்கும் அதிகமான மக்கள் வெள்ளமாக திரண்டு அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பை வெளியிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரபல திரைப்பட நடிகையான கீதா குமாரசிங்க சுவிட்சர்லாந்து குடியுரிமையுடையவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

கீதா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கையின் மொத்த சனத்தொகை 20. 27  மில்லியன் என இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவிக்கின்றமையும் கவனிக்கப்பட வேண்டியது.