பான் கி மூனின் பதவிக்காலம் முடிவடைவும் புதிய பொதுச்செயலாளர் தேர்வும்

பான் கி மூன் பதவிக்காலம் முடிவதால், ஐ.நா. சபைக்கு புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுகிறார். அந்த வாய்ப்பு ஒரு பெண்ணுக்கு கிடைக்கலாம்.

ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பதவி வகிப்பவர், தென் கொரியாவை சேர்ந்த பான் கி மூன். 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் திகதியன்று அந்தப் பதவிக்கு வந்தார். 5 ஆண்டு பதவி வகித்த நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு இறுதியில் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

அவ்வகையில் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவரும், அமெரிக்க தூதருமான சமந்தா பவரும், பொதுச்சபை தலைவர் மோஜன்ஸ் லிக்கிடாப்டும் இது தொடர்பாக ஐ.நா. சபையின் 193 உறுப்பு நாடுகளுக்கு ஒரு கடிதத்தை சுழற்சியில் விட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் ஐ.நா. சபைக்கு புதிய பொதுச்செயலாளராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து உறுப்பு நாடுகள் பெயர்களை பரிந்துரை செய்யலாம் என்றும், தேர்வு முறை மிகவும் வெளிப்படையானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், அந்தப் பதவிக்கு பெண்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நா. சபை தோற்றுவிக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிற நிலையில் இதுவரை அதன் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ளனர், ஒரு பெண் கூட தேர்ந்தெடுக்கப்பட்டது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனக்கு பிறகு பெண் ஒருவரே ஐ.நா. பொதுச்செயலாளர் பதவியை அலங்கரிக்க வேண்டும் என்பது பான் கி மூனின் விருப்பம் ஆகும். இது தொடர்பாக அவர் பல முறை கோடிட்டுக் காட்டி உள்ளார். அப்போது அவர், ‘‘ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கு ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இதுவே உகந்த தருணம்’’ என கூறி இருக்கிறார்.

எனவே இந்த முறை பெண் ஒருவருக்கு, இந்த வாய்ப்பு வழங்கப்படலாம்.

ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கு உரியவரை தேர்ந்தெடுப்பதில் தற்போதைய நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும், தேர்வு முறையை மேம்படுத்த வேண்டும் என்று இந்தியாவும் வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக ஐ.நா. சபைக்கான இந்தியாவின் தூதர் அசோக் முகர்ஜி கருத்து தெரிவிக்கையில், ‘‘ஐ.நா. பொதுச்செயலாளர் பதவியைப் பொறுத்தமட்டில், பாலின சமத்துவமும், பிராந்திய சுழற்சியும் கொண்டு வரப்படவேண்டும்’’ என கூறினார்.

இந்நிலையில், ஐ.நா. புதிய பொதுச்செயலாளர் பதவிக்கு வந்துள்ள பரிந்துரைகள் பற்றி பொதுச்சபை தலைவர் மோஜன்ஸ் லிக்கிடாப்ட் கூறுகையில், ‘‘இப்போது ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கு 2 பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. ஒருவர் ஐரோப்பிய நாடான குரோஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி வெஸ்னா புசிக், மற்றொருவர் ஐ.நா. பொதுச்சபையின் முன்னாள் தலைவரான மாசிடோனியாவை சேர்ந்த செர்க்ஜான் கெரிம் ஆவார்’’ என்றார்.

ஐ.நா.சபையின் புதிய பொதுச்செயலாளர் 2017–ம் ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்பார்.

ஐ.நா. சாசனத்தின்படி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரையின்படி, பொதுச்செயலாளரை ஐ.நா. பொதுச்சபைதான் நியமிக்கும்.

இதுவரை ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்வு, மூடிய அறைக்குள்தான் நடந்திருக்கிறது. இதில் ‘வீட்டோ’ என்னும் மறுப்புரிமை ஓட்டு அதிகாரத்தை கொண்டுள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 5 நாடுகளின் முடிவுதான், முக்கியத்துவம் பெற்று வந்துள்ளது.

ஆனால் இந்த முறை, ஐ.நா. சபை பொதுச்செயலாளர் தேர்வு நடைமுறையை வெளிப்படையானதாக்க வேண்டும் என்ற கோரிக்கை உறுப்பு நாடுகள் இடையே எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.