பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை முயற்சி – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்…

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்த ராஜா இன்று(13) உத்தரவிட்டுள்ளார்.

காராளசிங்கம் – குலேந்திரன், வேலாயுதம் – விஜயகுமார், முருகையா- தவேந்திரன், லூசிமரியநாயகம் – அஜந்தன், ஞான சேகர லிங்கம் – ராஜ்மதன் ஆகிய விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஐவருமே குற்றவாளிகளாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் போராளிகள் ஐவர் கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இதன்போது குறித்த நபர்கள் மேற்படி குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் இவர்களிடம் மீளவும் வாக்குமூலங்கள் பதிவு செய்ய வேண்டியிருப்பதாகவும் பயங்கரவாத தடுப்புப் பொலிசார் அனுமதி கோரியிருந்தனர்.

இதனை கவனத்தில் எடுத்த நீதிமன்றம் எதிர்வரும் 14ஆம், 15 ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில்அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து வாக்குமூலங்களை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை இரண்டாவது சந்தேக நபரை வெளியிடங்களுக்குக் கொண்டு சென்று சில விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அதற்கான அனுமதியையும் கோரியிருந்தனர்.

குறித்த சந்தேக நபரை 20, 21,மற்றும் 22 ஆகிய திகதிகளில் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து வெளியில் அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை சந்தேக நபர்களை வெளியில் சென்று விசாரிப்பதற்கு உரிய பாதுகாப்பில்லை என்றும் இது சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாகவே இருக்கின்றன. இவர்களது பாதுகாப்புஉறுதிப் படுத்தப்பட வேண்டும் என்று சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளான எஸ்.விஜயராணி, மற்றும் அர்ச்சுனா ஆகியோர் மன்றில் தெரிவித்தனர்.