பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சனுக்கு எதிரான முறைப்பாட்டின் விசாரணைகள் ஆரம்பம்…

மரண அச்சுறுத்தல் விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த முறைப்பாடு செய்திருந்த நிலையில், குறித்த முறைப்பாட்டின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கட பொலிசார், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவுறுத்தி, வெலிக்கட பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் விசாரணை அதிகாரி, சுதத் அஸ்மடல்ல, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்தவின் முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்ததாக நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த 15ம் திகதி பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, இந்திக அனுருத்தவுக்கு கத்தியினை காட்டி மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும், அப்போது அவ்விடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவும் கத்தியுடன் இருந்தாரென்று முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாக பிரதான பொலிஸ் விசாரணை அதிகாரி நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.