பாராளுமன்ற கலைப்பு சட்ட விரோதமானதென உச்ச நீதிமன்றம் அறிவிப்பு…

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி கடந்த நவம்பர் மாதம் 09ம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலானது சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் இடம்பெற்றது.

அதனடிப்படையில் குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர்களினால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.