(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று(06) மூன்றாவது முறையாக காலை 11 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளது.
அதன்படி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று(06) தெரிவுக் குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
குறித்த பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் ஆகியோர் கடந்த 29ஆம் திகதி சாட்சி வழங்கியிருந்தனர்.
இரண்டாவது நாளான கடந்த 04ம் திகதி பாராளுமன்ற தெரிவுக் குழுவில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக டி சில்வா ஆகியோருக்கு முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனினும், பாராளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக டி சில்வா மாத்திரம் சாட்சி வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.