பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 07 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு, பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, 52 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட மாட்டாததெனவும் அவர்களுக்கான தண்டனை தொடர்பில் விரைவில் தீர்மானிக்கவுள்ளதாகவும் குறித்த குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றில் ஏற்பட்ட மோதல் நிலை தொடர்பில் விசாரணை செய்த குழுவின் அறிக்கை, கடந்த 22ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டநிலையில், குறித்த அறிக்கைக்கு அமையவே, குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, பத்ம உதயசாந்த ஆகியோருக்கு எதிராக பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் பாராளுமன்றத்தினுள் மிளகாய் தூள் தூவியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழும், ஐக்கிய தேசிய கட்சியின் ரஞ்சன் ராமநாயக்க, பாலித தெவரப்பெரும ஆகியோருக்கு எதிராக பாராளுமன்றத்துக்குள் கத்தி ஒன்றை கொண்டு வந்தமை தொடர்பில் வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சபாநாயகரின் மேசை மீது உள்ள ஒலிவாங்கியை உடைத்து சேதமாக்கியதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த அளுத்கமகே, திலும் அமுனுகம ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.