சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு (77) ஆயுள் தண்டனை விதித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் எஸ்சி, எஸ்.டி, சிறப்பு நீதிமன்றம் நேற்று(25) தீர்ப்பு வழங்கியது.
குறித்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷில்பா, சரத் ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதே வழக்கில் தொடர்புடைய பிரகாஷ், சிவா ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2013ம் ஆண்டு தனது ஆசிரமத்தில் தங்கிப்படித்து வந்த 16 வயது சிறுமியை ஆசாராம் பாபு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் அப்போது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தலைமறைவான ஆசாராமை, சில நாள்களிலேயே இந்தூரில் பொலிசார் கைது செய்தனர். அவருக்கு பல்வேறு வகையில் உதவியதாக ஷில்பா, சரத், பிரகாஷ், சிவா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்கும் சட்டம் (போஸ்கோ) , சிறார் நீதிச் சட்டம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இந்தியத் தண்டனையியல் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ஆசாராம் சிறையில் உள்ளார். அவர் ஜாமீன் கோரி 12 முறை பல்வேறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. 2013 நவம்பரில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஆசாராம் தனது மரணம் வரையில் சிறையில்தான் இருக்க வேண்டும். மேலும், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவர் சாமியார் அல்ல; பாலியல் சதியை திட்டமிட்டு நடத்தியவர் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
####