ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் பணிபுரியும் சீனப்பிரஜைகளின் உணவுக்காக விற்பனை செய்வதற்குக் கொண்டு சென்ற இரு பால் ஆமைகளுடன், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாக பிரகடனம் செய்யப்பட்ட பால் ஆமைகளை வைத்திருத்தல் மற்றும் கொல்லுதல் தடை செய்யப்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் ஹம்பாந்தோட்டை ஆறுகளில் வாழும் பால் ஆமைகளைப் பிடித்து சீனப் பிரஜைகளுக்கு பணத்துக்காக விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறான நபர்கள் பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சீனப்பிரஜைகள் தங்கியிருக்கும் இடங்களில் ஆமைகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டிலும் சிலர் கைது செய்யபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.