பிக்பேஷ் லீக் T-20 தொடரில் ஒரே பந்தில் 17 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த ஆஸி வீரர்..

அவுஸ்திரேலியாவின் பிக்பேஷ் லீக் இருபதுக்கு 20 தொடரில் ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் பந்து வீச்சாளர் ரைலி மெரிடித் (Riley Meredith) வீசிய ஒரே பந்தில் 17 ஓட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

பிக்பேஷ் தொடரின் லீக் போட்டி ஒன்றில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் – ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிகள் (Melbourne Renegades – Hobart Hurricanes)மோதிய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ரெனிகேட்ஸ் (Renegades) அணி, களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய ஹரிக்கேன்ஸ் (Hurricanes) அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்கள் சேர்த்தது.

இதனையடுத்து 184 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ரெனிகேட்ஸ் (Renegades) அணியால், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஹரிக்கேன்ஸ் அணி வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியின் ரெனிகேட்ஸ் (Renegades) அணி சேசிங்கைத் தொடங்கியபோது, ஹரிக்கேன்ஸ் (Hurricanes) அணி வீரர் ரைலி மெர்டித் (Riley Meredith)முதல் ஓவரை வீசினார்.

முதல் மூன்று பந்துகளை சிறப்பாக வீசிய மெர்டித் (Riley Meredith), ஒரு ஓட்டத்தினை மட்டுமே கொடுத்தார். நான்காவது பந்தை ரெனிகேட்ஸ் (Renegades) அணியின் தலைவர் ஆரோன் பின்ச் (Aaron finch) எதிர் கொண்டார்.

அந்த பந்து மெர்டித் (Meredith)நோ பாலாக வீசவே, ஃப்ரீ ஹிட் (free-hit)கொடுக்கப்பட்டது. ஃப்ரீ ஹிட் பந்தை அவர் வொய்டாக (wide ball) வீச, அது விக்கெட் காப்பாளர் கைகளுக்குச் சிக்காமல் பவுண்டரிக்குச் சென்றது.

மூன்றாவதாக அவர் வீசிய பந்தும் நோபாலாக, அந்த பந்து பின்சின் மட்டையில் இன்சைட் எட்ஜாகி ஃபைன் லெக் திசையில் பவுண்டரிக்குச் சென்றது.

நான்காவது பந்தையும் மெர்டித் நோபாலாக வீச, அதை லாங்க் ஆஃப் திசையில் பின்ச் பவுண்டரியாக்கினார்.

இதையடுத்து, ஐந்தாவது முறையாக அவர் வீசிய பந்தில் பின்ச் ஒரு ரன் எடுத்தார். இதன்மூலம் மெர்டித் வீசிய நான்காவது பந்தில் மட்டும் 3 பவுண்டரிகள் உள்பட 17 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.

அவர் வீசிய முதல் ஓவரில் மொத்தம் 23 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் 3 ஓவர்கள் பந்து வீசிய மெர்டித், 43 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.

 

(iFA)