‘பிக் பாஸ் 2’ மீண்டும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்…

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன், ஜூன் 17 ஆம் திகதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

கடந்த வருடம் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. தொலைகாட்சி, தொலைபேசி, பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், ஆரவ், ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், ஹார்த்தி, அனுயா, காஜல், கணேஷ் வெங்கட்ராம், கஞ்சா கருப்பு, ரைஸா வில்சன், பரணி, ஷக்தி வாசு, சுஜா வருணி, ஜூலி, நமிதா, ஸ்ரீ என மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

கடந்த வருடம் ஜூன் 25 ஆம் திகதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைந்தது. இதில், ஆரவ் போட்டியின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்படி கிட்டத்தட்ட 100 நாட்கள் மக்களை ஆர்வத்துடன் பார்க்கவைத்த இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன் எப்போது தொடங்கும் என அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

ஆனால், இரண்டாவது சீஸனை கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. இந்த முறையும் சென்னை- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் தான் வீடு செட் போடப்பட்டு வருகிறது. தற்போது அங்கு வைத்துதான் கமலைக் கொண்டு புரமோஷன் வீடியோ படம்பிடித்து வருகின்றனர். ஜூன் 3 ஆம் திகதி இந்த புரமோ வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஜூன் 17 ஆம் திகதி முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது என உறுதியான தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்