பிணவறையில் நடமாடிய வாலிபர்: அலறி அடித்து ஓடிய ஊழியர்!!

திருச்சி அரசு மருத்துவ மனையில் நள்ளிரவில் பிணவறையில் போதையில் நின்று கொண்டிருந்த வாலிபரை கண்டு அங்கு பணிபுரியும் ஊழியர் ’’பேய் பேய்’’ என அலறிக் கொண்டு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி குணசீலம் மலையப்ப சாலையைச் சேர்ந்த சக்திவேல் (35) என்பவர் விபத்தில் இறந்து விட்டதால் பொலிசார் அவரது உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த சக்திவேல் உறவினர் ரஞ்சித் அழுது கொண்டே, பிணவறைக்குள் சென்று சக்திவேலை கட்டிபிடித்து அழுதுள்ளார்.

இதை அறியாமல், ஊழியர்கள் பிணவறை கதவை மூடியுள்ளனர். பின்பு,இரவு 1 மணியளவில் ஒரு உடலை பிணவறையில் வைப்பதற்காக கதவை திறந்துள்ளனர். ரஞ்சித் உள்ளே நிற்பதை கண்ட ஊழியர் ’’பேய் பேய்’’ என அலறிக் கொண்டு ஓடியுள்ளார்.

இதையறிந்த பொலிசார் ரஞ்சித்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், `உறவினர் இறந்த தகவல் அறிந்து வந்தபோது பிரேத பரிசோதனை கூடத்தில் உடல் இருப்பதாக கூறப்பட்டது. கதவு திறந்து இருந்ததால் உள்ளே சென்றேன். திடீரென கதவு பூட்டப்பட்டது.

போதையில் இருந்ததால், சக்திவேல் உடல் அருகே படுத்து தூங்கிவிட்டேன். நேரம் செல்ல, செல்ல அதிக குளிரால் சிறிது போதை தெளிந்து பார்த்தபோது, சவக்கிடங்கில் இருப்பது தெரிந்தது. பின்னர் கதவு அருகே வந்து கதவை தட்டினேன் திறக்கவில்லை என்று கூறியுள்ளார்.