சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகத்தினால் அரசுக்கு 40 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் எச்.எம். காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று(12) வாக்குமூலம் வழங்கிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு இருந்த முழுமையான கடனில், 2.6 பில்லியன் ரூபாவை பிணைமுறி விநியோகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளவும், எஞ்சிய பணத்தை ஊழிய சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்ளவும் இருந்ததாக கணக்காய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகத்துக்காக நூற்றுக்கு 12.5 வீத வட்டிவீதத்தை தீர்மானித்தவர் யார் என்பது குறித்து தமக்கு போதிய விளக்கம் கிடைக்கவில்லை என்றும் கணக்காய்வாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்றும்(13) கணக்காய்வாளரிடம் ஜனாதிபதி ஆணைக்குழு, வாக்குமூலம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.